ந்தி தொலைக்காட்சியில் “கேள்விக்கென்ன பதில் நிகழ்க்கியில் ஆண்டாள் விவகாரம் குறித்து கலந்துகொண்டார் சுப.வீ. அது குறித்து தனது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது:

சுப.வீ.

நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின்கேள்விக்கென்ன  பதில்  நிகழ்ச்சி  ஒளிபரப்பான  அந்த  நிமிடம்தொடங்கி,  தொடர்ந்து  தொலைபேசி  அழைப்புகளால் சூழப்பட்டேன்  நான். நிறையப்  பாராட்டுகள்,  சில குற்றச்சாற்றுகள்,  சில  ஐயங்கள்  இவைகளைத் தாண்டி,அன்று  இரவு  முழுவதும்  ஆபாசச்  சொற்கள்கலந்த  மிரட்டல்கள்!  கவிப்பேரரசு  வைரமுத்துவின் ஆண்டாள்  தொடர்பான  கட்டுரை விவாதம்  அதே  அழுகல் வாடையுடன் இன்னும் தொடர்கிறது.

அது  கேள்விக்கென்ன  பதிலா  அல்லது  கேள்வி  மேல் கேள்வியா  என்று   கேட்டிருந்தார்  ஒரு  நண்பர்.   உண்மைதான். அரங்கில்  நான்  உணரவில்லை.  தொலைக்காட்சியில்பார்க்கும்போதுதான்  தெரிந்தது. முதல்  20  நிமிடங்களில்,  திரு பாண்டே எ ன்னை ஒரு  வினாவிற்குக்  கூட  முழுமையாக விடை  சொல்ல  அனுமதிக்கவில்லை.  கேள்விக்கு  மேல் கேள்வியாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.   இது  அவருடைய வழக்கமான  பாணிதான்.  இடையிடையே  அந்த  நக்கல் சிரிப்பும்  அவருடைய  வழக்கமான  உடல் மொழிதான். எனினும்  அவாள்  சிலரிடம்  பேசும்போது இந்த  நக்கல்சிரிப்பை  அவரிடம்   பார்க்க  முடியாது.

54  நிமிடங்கள்  எடுக்கப்பட்ட  ஒளிப்பதிவு  42  நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டது.  வெட்டப்பட்ட  12  நிமிடங்கள் நேரப் பிரச்சினைதான்  என்று  அவர்கள் கூறுவதை  ஏற்கிறேன். ஆனால்  அதில் விடுபட்ட  சில  முதன்மையான  செய்திகளை நான்  இங்கு பகிர்ந்துள்ளேன்.

குறிப்பாக இரண்டு  செய்திகள்.

1. தேவதாசி  என்ற சொல்லுக்காக  இவ்வளவு  சினம் கொள்ளும் பார்ப்பனர்கள்தாம்  அந்த  முறை,  இந்த  மண்ணில்  நிலைக்க வேண்டும்  என்று  சட்டமன்றத்தில்  வாதாடியவர்கள். அதனை எதிர்த்தவர்கள்  நாம்.  தந்தை பெரியார்,  மூவலூர்ராமாமிர்தத்தம்மையார்,   மருத்துவர் முத்துலட்சுமி ஆகியோர்   அதனை  எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே.ஆச்சார்யா  போன்றவர்கள்  ஆதரித்தனர். ஆக,  நம்  வீட்டுப்பெண்கள்  தேவதாசிகளாக  இருக்க  வேண்டும்,  அவர்கள் வீட்டுப்  பெண்கள்  அதற்கு அப்பாற்பட்டவர்களாக  இருக்க வேண்டும்  என்ற  எண்ணம்  உடைந்து  போகிறது  என்பதே அவர்களின்  கவலை.

2.  அவர்கள்  மனம் புண்பட்டு  விட்டததாகக் கவலைப்படுவோர், “நீறு  இல்லா  நெற்றி  பாழ்”  என்று சொன்னபோதும்,  “நாத்திகம்  பேசி  நாத்தளும் பேறியோர்” என்று  பாடியபோதும்  எங்கள்  மனம்  புண்படும்  என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே,  ஏன்?  புண்படுவது ஒரு வழிப்பாதையா  என்ன?

மேலே  உள்ள  செய்திகள்  நேரமின்மையாலோ, கவனமாகவோ  விடுபட்டுள்ளன.

வழக்கத்திற்கு  மாறாக,  அன்று  நான் உணர்ச்சிவயமாகவும்,  சற்றுச்  சினத்துடனும்  பேசினேன் என்று  பலரும்  கூறினர்.   உண்மைதான். இயல்பாக  நான் கோபப்படுவதில்லை  என்றாலும்,  கோபமே  கொள்வதில்லை என்ற  விரதம்  ஏதும் என்னிடம்  இல்லை.

என்னை  மட்டுமில்லை,  நாட்டு  நடப்புகள்  நம் எல்லோரையும்  கோபப்படவே  வைக்கின்றன. ஒன்றுமில்லாத  சிக்கலை  இத்தனை  பெரிதாக்கி,   அவர்கள் மொழியில்  சொல்வதானால், பேனைப்  பெருமாளாக்கித் தெருவுக்கு  வருவார்களெனில்,  நாமும்  தெருவுக்கு  வந்து எதிர்நிலை  அறப் போராட்டங்களில்  இறங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

கவிப்பேரரசின்  கவின்மிகு  அழகிய  தமிழுக்கு  எதிராக, காவி   உடை  அணிந்துள்ள  சாமியார்ப்  பெண்கள்  தொடங்கி அத்தனை  பேர்  பயன்படுத்தும்  சொற்களும்  அழுகியவாடையுடன்தான்  வெளிப்படுகின்றன.  தன்மானமுள்ள தமிழ்க்கூட்டமே  எழு,  சுத்தப்படுத்த  வேண்டிய  நேரம்தொடங்கிவிட்டது.