புதுச்சேரி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் ஆதாயத்துக்காக , ஒவ்வொரு தேர்தலின்போதும்,  ‘பச்சோந்தி’ போல  இடம்மாறுவதை அன்புமணியே உறுதி செய்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.  2022ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்: 2023ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில், புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, பட்டானூரில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் பாமகவின் பிரமண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் தான் எழுதிய ஆத்திச்சூடி புத்தகத்தை வாசித்து, விடியலுக்காக காத்திருக்கிறோம், விடியலுக்கு வெகுதூரமில்லை என்று கூறி உரையாற்றினார். இதையடுத்து உரையாற்றிய  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  “தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் கொண்ட கட்சி பாமக தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆய்வில் அதிக இளைஞர்கள் உள்ள கட்சி பாமக என தெரியவந்துள்ளது. இந்த பிரசாந்த் கிஷோர் தான் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வெற்றிபெற உதவியர் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவ முடிந்தது என்பதாகும்.

இதுதான் கட்சிக்கான வளர்ச்சி, வெற்றி. நாம் வளர்ச்சி அரசியலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நமது இலக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி அதனை அடைய பாடுபடவேண்டும்.

பாமக இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி கிடைத்திருக்காது. சமூக நீதி , 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. 108 அம்புலன்ஸ் கிடைத் திருக்காது, லாட்டரி ஒழிந்திருக்காது இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இதுதான் ஒரு கட்சியின் உண்மையான வெற்றி. அந்த வெற்றியை நோக்கி நாம் பயணிக்கிறோம். நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியாகும். நம் இலக்கை நோக்கி வேகமாக செல்ல பதவி முக்கியமாகிறது.

16 வருடங்களாக தொடர்ந்து நிழல் நிதி அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்துவருகிறார்கள். ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை செய்தியை பார்த்துதான் தெரிய வருகிறது. ஒருவர் வாட்ச் காட்டுகிறார். ஒருவர் அடுக்கு மொழியில் பேசுகிறார். நமக்கு தெரிந்தது வளர்ச்சி அரசியல். நமக்கான அங்கிகாரம் வரும்.

தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை. பாமக வேகமாக வளர்ந்து வருகிறது.  அரசியல் சூழல், அரசியல் களம் நமக்கானதாக உள்ளது. சில அரசியல் கட்சிகள் சத்தமே இல்லாமல் உள்ளது. அதிமுக 4-ஆக உடைந்துள்ளது.  அடுத்தது நாம் தான் பலமாக உள்ளோம்.  திமுக மீது பலமான விமர்சனம் உள்ளது.  மற்ற கட்சிகளின் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள் முடிந்தேபோனது. இட ஒதுக்கீடுகாக்கத்தான் கூட்டணிக்கே சென்றோம். ஆனால் கடந்த ஆட்சியில் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை, கிள்ளி கொடுத்தார்கள். 

டெல்டா மக்களின் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக நின்றோம். ஆனால் நமக்கு அங்கீகாரம் இல்லை, மக்கள் நமக்கும், கூட்டணி கட்சிக்கும் ஓட்டுப்போடவில்லை.

கட்சியின் கொள்கை எத்தனை மக்களை சென்றடைகிறது என்பது முக்கியம். எண்ணிக்கை அல்ல. கடந்த தேர்தலில் முக்கிய முடிவு எடுத்தது நமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதை நோக்கிதான். தமிழகத்தின் 2 பெரிய சமூகத்தில் 40 சதவீத மக்கள் உள்ளனர். ஒரு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று முன்னேறி வருகிறார்கள். 20 விழுக்காடு கேட்டபோது 10. 5 விழுக்காடு கிள்ளி கொடுத்தார்கள். பின் ரத்து செய்தார்கள். உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய சொன்ன காரணங்களில் 6-ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்க சொல்ல ராமதாஸ், தமிழக முதல்வரிடம் பேசியுள்ளார். மேலும் நானும், கோ.க.மணியும் பேசியுள்ளோம். இன்னும் 6 மாதத்தில் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும். அதற்கான முயற்சி நடந்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் 100 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.200 கோடி சம்பாதிக்கின்றனர். ஆன்லைன் குதாட்ட தடைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளார். ஏதேனும் குறை இருந்தால் திருப்பி அனுப்பிவிடுங்கள் அதனை சரிசெய்து கொடுக்க அமைச்சர் தயாராக உள்ளார்.

என்எல்சி விரைவில் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது. அதற்காதத்தான் நிலம் எடுக்கும் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்கு பாமக இடம் கொடுக்காது. ஒரு பிடி மண் எடுக்க விடமாட்டோம்” என்றார்.

வருகிற மே 5ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் சங்க மாநாடு நடத்த வேண்டும் என்று ஆசை, ராமதாஸ் ஐயா அனுமதி கொடுத்தால் நடத்தப்படும். பாமகவின் இலக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி தான். நாம் ஆட்சி செய்யாமலேயே இலக்கை அடைந்து கொண்டு தான் இருக்கிறோம். வளர்ச்சியை நோக்கி செல்கிறோம்.

இவ்வாறு பேசினார்.

பாமக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளை நிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும்.
  • தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்.
  • அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  • மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
  • வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
  • கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக அரசு பள்ளிகளில் ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.
  • நீட் தேர்விலிருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
  • இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப் படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
  • சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்.
  • புதுச்சேரியில் பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
  • புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தே, தங்களை மெருகேற்றிக்கொள்ளும், பாமக, தேர்தலில் வெற்றி பெற்றதுடம் கூட்டணி கட்சிகளை உதாசினப்படுத்துவது தொடர்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களது ஆதாயத்துக்காக கூட்டணி அமைப்பதும், அதன்மூலம் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இடத்துக்கு இடம் கலரை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போல பாமகவும் ஒரு பச்சோந்திதான் என்பதை, அவரது பேச்சு தெளிவுபடுத்தி உள்ளது. தற்போதுவரை அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இருப்பது அதிமுக போட்ட பிச்சை என்பதை மறந்துவிட்டார்போலும். தனது எம்.பி பதவிக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக, தற்போது இடஒதுக்கீட்டாக கூட்டணி வைத்தோம் என நாடமாடுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

கூட்டணி விவகாரம்: தான் ஒரு ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்  ராமதாஸ்!

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?