டெல்லி:  நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம்  நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், இந்த கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பிய நிலையில், மத்தியஅரசு பதில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை   நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.  கேள்வி நேரமின்றி நடைபெறும் இந்த கூட்டத்தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படர்தது எதிர்க்கட்சிகளிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் பரவின.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு   கடிதம் எழுதியிருந்தார். அதில், “மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன்படி,  லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசர தேவை, மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சேதம், சில மாநிலங்களில் வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ள தாக்கம் போன்றவை குறித்து  ஆக்கப்பூர்வமான முறையில் விவாதிக்கப்படும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

டெல்லியில், உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 64,500 சதுர மீட்டர், ஒரே நேரத்தில் 1,280 பேர் அமரும் வசதியோடு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும் அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் (விஸ்டா)  கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 “நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், அதிலிருந்து கற்று கொண்டது என்ன? என்பது குறித்து சிறப்பு அமர்வில் விவாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.  அதாவது, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தை விவாதிக்கும் நோக்கில் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமன மசோதா, தபால் நிலைய மசோதா 2023 உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பு, வரும் 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.  செப்டம்பர் 18ஆம் தேதி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.