சென்னை: அதிமுக பாஜக இடையே உரசல் நீடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு  இன்று முதன்முறையாக,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்துஎடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்வி, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எப்படி எதிர்கொள்வது, பாஜக -அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து நாளை காலை தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெய்குமார், திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி உள்ளது. அதனால் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  அதிமுக – பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல், சம்மந்தப்பட்டவர்கள்மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என கூறிய ஜெயக்குமார்,

சிலர் ஏதேதோ சொல்கிறார்கள். எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி. தேசிய அளவில் தேசிய கட்சி தலைமையில் கூட்டணி. என விளக்கம் அளித்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பற்றி பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் வேண்டும் என்பதே அதிமுக விருப்பம் என கூறியவர், ஓபிஎஸ் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அதிமுக கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் பயன்படுத்துவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, அவர் கடை நடத்துகிறார். இதனால் தான் அங்கு ஒருவரை நீக்குவது சேர்ப்பது என்பது நடந்து வருகிறது.  ஓபிஎஸ் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்றார். இது குறித்து விரைவில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு சொன்னது போல ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இந்த மூன்று வகையறாக்களை தவிர, வேறு யார் வந்தாலும் சகோதர மனப்பான்மையுடன் நாங்கள் அதிமுகவில் ஏற்றுக் கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அப்போது ஓ பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். அங்குள்ள 9 சதவிகிதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து கட்சி தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

 

பாஜகவினருக்கு மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிர்! அண்ணாமலையை சீண்டிய செல்லூர் ராஜு