சென்னை: கூவம் கரையோரம் வசித்து வந்த 178 குடும்பங்களுக்கு புளியந்தோப்பில் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அவர்களுக்கு  புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது அவர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் சத்தியவாணி முத்துநகரில் 2092 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை  தமிழக அரசு அங்கிருந்து அகற்றி வந்தது. இவர்களில் 1914 குடும்பத்தினருக்கு ஏற்கனவே பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு  அங்கு குடியேறி விட்டனர். மீதி வீடுகள் கிடைக்காத, 178 குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், சென்னையிலேயே வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 178 குடும்பத்தினரையும் கே.பி.பார்க் குடியிருப்பில் மறு குடியமர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

178 குடும்பத்தினரும் உடனடியாக புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு பகுதிகளுக்கு மாறி செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு புதிதாக கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடுகளை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதன்பேரில் 178 குடும்பத்தினருக்கு  வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து 178 குடும்பங்களை சேர்ந்தவர்களில் பலர் அன்றே தங்களது வீடுகளை காலி செய்யும் பணியை மேற்கொண்டனர். தங்களது உடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் சத்தியவாணி முத்து நகரில் இருந்து வெளியேறி புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்புக்கு சென்றனர். படிப்படியாக அனைத்து குடும்பத்தினரும் காலி செய்து வருவதாக தெரிவித்தனர்.

தமிழகஅரசின் இந்த நடவடிக்கை அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.