சென்னை: விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 12 பேர் களம் இறங்கினர்.

வாக்குப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.  விக்கிர வாண்டி தொகுதி  அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.

அதேபோல, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட நாராயணன் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியை தொடர்ந்து அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

சட்டமன்றத்தில் மொத்தமுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். இந்த இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்திருக்கிறது. திமுக 100 உறுப்பினர்களுடன் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏவாக டிடிவி தினகரனும் இருக்கின்றனர்.