சென்னை: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 3.59 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ந்தேதி   ஒரேநாளில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த  இருப்பதால் கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.