சென்னை: தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிக்கிய அப்போதைய அதிமுக  அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இன்று  குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாட்டில், போதைப்பொருட்களான குட்கா, பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவை மதிக்காமல், குட்கா விற்பனை ஜோராக நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ,  இந்த விவகாரத்தில் அப்போதைய அமைச்சர் ரமணா உள்பட அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை கண்டுபிடித்தது. இந்த வழக்கு சென்னை 8-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கதுதுறையும் கடந்த  2018 ஆம் ஆண்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக  அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, குட்கா பதுக்கி வைத்திருந்த  உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தது. இந்த விவகாரத்தில்,   246 கோடியே 10 லட்ச ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள 27 பேர் மற்றும் , 3 நிறுவன அதிகாரிகளும் வந்திருந்தனர்.

அவர்களுக்கு ட்ட குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு  பை வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணைசெப்டம்பர் 21 ஆம் நடைபெறும் என கூறி விசாரணையை தள்ளி வைக்கப்பட்டது.