ஜெயலலிதா தலைவியாக இருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசியது வன்மையாகக் கண்டித்தக்கது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜி. வெங்கடாசலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகியான ஏ.வி. ராஜு கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி. ராஜு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டபோது கூவத்தூரில் பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருந்தவர் இந்த வெங்கடாசலம் என்று கூறியிருந்தார்.

மேலும், அப்போது கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்த எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்ததாகவும் அவர்களின் உல்லாசத்திற்கு அவர்களுக்கு தேவையான நடிகைகளை நடிகர் கருணாஸ் மூலம் அழைத்துவந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஏ.வி. ராஜு-வின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் இதுகுறித்த எந்த ஆதாரமும் இன்றி வாய்க்குவந்ததை பேசியதாக ஏ.வி. ராஜு மீது விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் ஏ.வி. ராஜு-வின் பேச்சுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்திருப்பதுடன் எந்தஒரு முகாந்திரமும் இல்லாமல் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியிருக்கும் அதிமுக நிர்வாகி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழக அரசும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் குஷ்பு-வுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தரக்குறைவாக பேசி நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய நிலையில் தற்போது ஏ.வி. ராஜு பேசிய விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.