லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக நடிகர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை – கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்தப் பாடலில் ”ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க” மற்றும் “பொகையல அறுவடைக்கு தயாரான” என வரும் பாடல் வரிகள் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளன. மேலும் இப்பாடல் வரிகள் ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மீதான இந்த புகார் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில் படம் வெளிவர இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான விளம்பரம் “பத்தல… பத்தல இன்னும் சத்தமா” என்ற ரேஞ்சுக்கு பதிலளித்து வருகின்றனர்.