விழுப்புரம்: தேர்தல் காரணமாக,  பெண் VAO வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜிவ்காந்தி தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி, விதியை மீறி செயல்பட்டபோது, அதை கண்டித்த, பெண் வி.ஏ.ஓவை கடுமையாக தாக்கினார். பெண் விஏஓவின்  தலையை முடியை பிடித்து இழுத்து சென்று வயிற்றிலேயே எட்டி உதைத்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த பெண் விஏஓ சுருண்டு விழுந்தார். திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி  தாக்கியதில் அந்த பெண் வி.ஏ.ஓ வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பெண் அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையறிந்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி, தலைமறைவானார். அவரை தேடி வருவதாக காவல்துறை கூறிய நிலையில், அவரை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்தியது. இதையடுத்து, விஏஓ சங்கத்தினர் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதனால், வேறு வழியின்றி நேற்று இரவு ராஜீவ்காந்தியை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியதாக திமுக மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  “விழுப்புரம் மாவட்டத்தில்,கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சியினர், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி.

ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாக சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.