சென்னை: திமுக அரசு,  முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம்  மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை, கைது செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர், அவர்மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது சென்னை காவல்துறை சார்பிலும் வழக்கு  பதியப்பட்டு உள்ளது… உள்ளது.

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு! பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழ்லுநாடு அரசு மற்றும் காவல்துறையினரின் இந்த நடிவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கா், சவுக்கு மீடியா என்ற பெயரில் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர்  திமுக அரசின் நடவடிக்கை, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரின் தொழில், மற்றும் திமுக அரசில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார். இதனால், அவர்மீது காவல்துறை, மற்றும் திமுக அரசு , முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். அவரது குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்க மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் ரெட்ஃபிக்ஸ் எனப்படும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பணி நிமித்தமாக தேனி சென்றிருந்த சவுக்கு சங்கரை,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாா் குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸாரால் கடந்த 4-ஆம் தேதி  நள்ளிரவு தேனியில்  வைத்து கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு வருகிறத.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது  சென்னை காவல்துறையும் வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஐபிசி பிரிவுகள் 294(பி), 354(டி), 506(ஐ), 509 மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேனி, சேலம் மற்றும் திருச்சி மாவட்ட காவல் நிலையங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை காவல்துறை வழக்கு விவரம்:

தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி (ஆபாசமாக திட்டுதல்), 354 டி(பெண்ணைப் பின் தொடர்தல்), 506(1)(மிரட்டல்), 509(பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார், தேனி பழனி செட்டிப்பட்டி போலீஸார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மேலும் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை போலீஸார் விரைவில் சவுக்கு சங்கரை கைது செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது