சென்னை: பொங்கலையொட்டி நடப்பாண்டு 50 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை  30 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும்  மேலும், 20 லட்சம் விற்க இலக்கு செய்யப்பட்ட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை சமயத்தில் நெய் உபயோகம் அதிகம். இதனால், ஆவின் நிறுவனம் சார்பில் 100 கிராம் அளவிலான  நெய் பாக்கெட்டுகள் விற்பனையை ஆவின் துரிதப் படுத்தி உள்ளது.  இந்த ஆண்டு,  நெய் விற்பனை அதிகரிப்பை நோக்கி,  50 லட்சம் பாக்கெட்டுகள்  உற்பத்தி செய்ய திட்டமிட்டு, பணிகளும்  நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர்கள், விற்பனை மையங்களில் தற்போது 100 கிராம் நெய் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ. 75 மதிப்பு கொண்ட 100 கிராம் ஆவின் நெய் இதுவரையில் 30 லட்சம் 100 கிராம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும்,  மேலும் 20 லட்சம் பாக்கெட்டுகளின் விற்பனை  தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையா தெரிவித்தார்.

திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100 கிராம் நெய் பாக்கெட்டுகள்  அதிகளவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அனைத்து ஆவின் விற்பனை மையங்களில் 100 கிராம் நெய் பாக்கெட் விற்பனைக்கு உள்ளதாகவும் கூறினார்.  இதுதவிர கூட்டுறவு விற்பனை சங்கங்கள் டி.யு.சி.எஸ். மற்றும் அதனுடைய ரேஷன் கடைகளிலும் ஆவின் நெய் பாக்கெட் விற்பனைக்கு ஆர்டர் கேட்கப்பட்டிருப்பதாகவும்,  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக நெய் பாக்கெட் தேவைப்பட்டாலும் வினியோகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  பொங்கல் பண்டிகைக்கு நெய், வெண்ணெய் அதிகமாக விற்பனை ஆகும் என்பதால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.