கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது.

தென் இந்தியாவின் முதல் சாய் பாபா கோயிலான இந்த கோயில் 1939 ஆம் ஆண்டு திரு நரசிம்ம சுவாமிஜி வரதராஜ ஐயா அவர்களால் பாபாவின் மீது கொண்ட பக்தியாலும் சாய்பாபாவின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் சாய்பாபா பீடம் என்ற பெயரில் துவங்கப்பட்டது.

1943 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் அபிஷேகமும், ஆராதனையும் பூஜைகளும் நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் சாய்பாபாவின் திருவுருவ படத்தின் மீது ஒரு நாகம் தோன்றி பக்தர்களின் பூஜைகளை ஏற்றுக்கொண்டு பஜனையை அமைதியுடன் கேட்டது.

அடுத்த நாள் காலை 11 மணி வரை 15 மணி நேரத்திற்கு மேலாக அந்த நாகமானது பாபாவின் படத்தில் இருந்ததாகவும், பாம்புகள் மற்றும் புற்றுகள் இல்லாத பகுதியில் அந்த பாம்பு நகர்ந்து சென்று மறைந்த இடத்தில் அதிசயமாக ஒரு புற்று உருவாகுவே இவ்விடம் புற்று கோயில் என்றும் அழைக்கப்பட்டது.

மூலவர் சிலைக்கு பின்புறம் உள்ள மிகப்பெரிய சாய்பாபாவின் பழமையான ஓவியம் கைகளால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியமாக காட்சி தருகின்றது. இதை இன்றளவும் கோயில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தவர்களும் வழிபடும் இந்த தலத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மெழுகுவர்த்தியும் திருவிளக்கும் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் உள்ள துணி சீரடியில் இருந்து கொண்டுவரப்பட்டது.

தற்போது வரையிலும் மிகவும் பரிசுத்தமாக பாதுகாக்கட்டும் வருகின்றது. அதிலிருந்து எடுக்கப்படும் விபூதியானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இன்றளவும் துணியில் உள்ள ஜோதி அணையாமல் எரிந்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.

ஆசியாவிலேயே சாய்பாபாவிற்காக தங்கத்தை கொண்டுள்ள கோயில் நாகசாய் கோயிலாகும். ஒவ்வொரு வியாழன் தோறும் தங்கத்தேரில் பவனி வந்து நாகசாகி பக்தர்களுக்கு காட்சிபுரிகின்றார். இக்கோயிலில் பாபாவின் தரிசன தினம், குருபூர்ணிமா, ராமநவமி, விஜயதசமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் ஹோமம் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் சத்திய நாராயண பூஜை மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.