டில்லி

ம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்து இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் நேற்று சம்மன் அனுப்பியது.  கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முதல்வர் கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பியதற்கு டில்லி அமைச்சர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிஷி மர்லினா இது குறித்து ,

“பாஜக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை “பொய்” வழக்குகளில் சிக்க வைக்க முயல்கிறது. பாஜக ஆம் ஆத்மி கட்சிக்குப் பயந்து, பஞ்சாப் மற்றும் டில்லியில் அரசு செய்யும் பணிகளைப் பார்த்துப்  பயப்படுகிறது… ஆகவே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்பி கட்சியை முடிக்க பாஜகவினர் நினைக்கிறார்கள்”

என்று கூறி உள்ளார்.