டெல்லி:

தேசிய புலனாய்வு அமைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏற்கனவே பயோ மெட்ரிக் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப் பிரிவு 29(1)ன் கீழ் எனது பயோமெட்ரிக் தகவல்களை கூட மற்றவர்களுக்கு வழங்க முடியாது. ஒரு வேலை தகவல்கள் கசிந்தால் சம்மந்தப்பட்ட ஆதார் அதிகாரி தப்பிக்க முடியாது.

ஆதார் ஒரு வலுவான, பாதுகாப்பான முற்றிலும் கணக்கில் வரக்கூடியதாகும். குடிமகன்களின் தனிப்பட்ட ரகசியம் காக்கப்படும் வகையில் இந்த திட்டம் வலுவுள்ளதாக இருக்கும். இதில் விதி மீறிய 34 ஆயிரம் ஆபரேட்டர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு திட்டங்களை திருடுவோரிடம் இருந்து தடுக்க ஆதார் சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. சமையல் எரிவாயு திட்டத்தில் ஒரு பில்லியன் டாலர் சேமித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த திட்டத்தை மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய திட்டம் என்று உலக வங்கி தலைமை பொருளாதார வல்லுனர் பால் ரோமர் தெரிவித்துள்ளார்”என்றார்.

முன்னதாக தீவிரவாத செயல்கள், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தத 21 வகையான தகவல்களை அமலாக்க முகமைகள் குறுக்கு பரிசோதனை செய்து கொள்வது குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக எதிரகட்சியினர் எழுப்பிய அச்சத்தை தொடர்ந்து ரவிசங்கர பிரசாத் இந்த அறிவிப்வை வெளியிட்டார்.

மேலும், முதியவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்களின் பயோ மெட்ரிக் தகவல்களும், ரேகைகளும் ஒத்துப்போகாதால் நலத்திட்டங்கள் மறுக்கப்படுகிறது. அதனால் இதை மறு ஆய்வு செய்து தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்ற சிபிஐ கட்சியின் உறுப்பினர் தாபேன் சென்னில் கருத்துக்களை ரவிசங்கர பிரசாத் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் திரிணமுல் காங்கிரஸ் எம்பி தெரக் ஓ ப்ரைன் பேசுகையில், “ ஒரு இணையதளத்தால் 5 லட்சம் சிறுவர் சிறுமியரின் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது” என்றார்.

‘‘மானியம் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் போலி ஆதார் அட்டைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது’’ என்று சுயேட்சை எம்பி ராஜீவ் சந்திரசேகரன் தெரிவித்தார்.