சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும்,  இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்புப்ம் செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பந்தயம், சூதாட்டத்திற்கு அடிப்படை உரிமை இல்லை, பணத்திற்காக விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழகம், கர்நாடகா விதித்த தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  இது ‘பந்தயம் மற்றும் சூதாட்டம்’ என்ற வகையில் வரி விதிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த 2022-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்மூலம், ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட இணையவழி சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடப்படும் வாய்ப்பு விளையாட்டுகளை  தடை செய்கிறது.

இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்துசெய்து, இந்திய உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தின் செல்லுபடியை உறுதிசெய்தது.

தமிழ்நாட்டில்,  ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பணத்தை பறிக்கொடுத்து தமிழகத்தில்  ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நிலையில்,  இதை தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்றியது.

இதை எதிர்த்து, இந்த வகை விளையாட்டுகளை அளித்துவரும் பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தன. மாநில அரசுகளுக்கு ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் அதிகாரம் இல்லை என தங்களின் வாதத்தை விளையாட்டு நிறுவனங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அதேபோன்று கர்நாடகா அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்தையும் அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக, கர்நாடக அரசுகள் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை, கர்நாடகா உயர் நீதிமன்றங்களின் தடை உத்தரவு தவறானது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று இணைய வழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

முன்னதாக,  கடந்த 2023இல் வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், இத்தகைய ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை வணிகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை எனக் கருதப்படுவதால், அத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு அடிப்படை உரிமையையும் விளையாட்டு நிறுவனங்கள் கோர முடியாது. எனவே இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு செல்லும்” என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

[youtube-feed feed=1]