புதுடெல்லி: வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இந்திய மாணாக்கர்களில் 84% பேர், இந்தியாவில் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இடம் கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்கும் மாணாக்கர்கள், இந்தியாவில் பயிற்சி செய்ய வேண்டுமெனில், அவர்கள் என்பிஇ(வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி) என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்து, உள்நாட்டில் மருத்துவராகப் பயிற்சிசெய்ய முடியும்.

கடந்த 2012 – 2018 வரையான காலகட்டங்களில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, இந்திய நுழைவுத்தேர்வை எழுதியோரில் 84% தேர்ச்சியடையவில்லை என்று என்ற தகவலை நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலாக வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்.

அதேசமயம், கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு மேற்கண்ட தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.