புதுடெல்லி: ரூ.10 லட்சத்திற்கு மேல் நிலுவைத்தொகை வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளது ஏர் இந்தியா.

கடும் நிதி நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல அரசு அமைப்புகள், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.268 கோடி வரை நிலுவை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஐ, அமலாக்கத்துறை, இந்திய தணிக்கை வாரியம், எல்லைப் பாதுகாப்புப் படை, சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு தணிக்கை அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றுவோர், தங்களின் பணி நிமித்தமாக ஏர் இந்தியா விமானங்களையேப் பயன்படுத்துகின்றனர்.

ஏர் இந்தியா சேவை கிடைக்காத இடங்களில் மட்டுமே தனியார் சேவைகளை நாடுகின்றனர். ஆனால், பயணம் முடிந்து அவர்கள் அதற்கான கட்டண பாக்கியை சரியான நேரத்தில் தருவதில் அக்கறை செலுத்துவதில்லை.

இதனால், கடும் நிதி நெருக்கடி ஏற்படவே, ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் தருவதில்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.