சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நகரம் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ள நிலையில், 3 நாட்களில் 78 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்ப, முதல்வரின் உத்தரவின்பேரில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அடையாள பயணச்சீட்டு கடந்த 12–ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயணசீட்டு வழங்கிய நாளில் இருந்து முதல் 3 நாட்களில் மட்டும் 7,291 நகரப் பேருந்துகளில், 78 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர் என கூறினார்.
மேலும், கட்டணமில்லாத சலுகையை 40% மகளிர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 60% வரை மகளிர் பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளதும், திருநெல்வேலி கோட்டத்தில் மட்டும் நகரப் பேருந்தில் 68% மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றார்.
மேலும், 5,741 திருநங்கையர்கள், 51,615 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 8,356 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். இந்த திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.