சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில்  மேலும் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுவதற்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், நடப்பாண்டில்,  தனியார் கல்லூரிகளை விட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனால், புதியதாக மேலும் 7கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழகஅரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியிடங்களுக்கு இடங்களுக்கும் ஒப்புதல் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர்,உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர்கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் 2020-21 ம் நடப்பு கல்வியாண்டில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் வானூர் (திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம், ராணிப்பேட்டை மாவட்டம் ஜம்புகுளம் ஆகிய இடங்களில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், கோயம்புத்தூர் மாவட்டம் புலியக்குளத்தில் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என 7 கல்லூரிகள் துவக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அந்தக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் மற்றும் 13 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 7 கல்லூரிக்கும் 11 ஆசிரியர்கள், 91 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.