சேலம்: அகில இந்திய அளவில் புகழ்பெற்றது சேலம் ஜவ்வரிசி. இதற்கு புவிசார் குடியீடு பெற  சாகோசெர்வ் (Sagoserve) எனப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில்துறை கூட்டுறவு சங்கம்  விண்ணப்பம் செய்துள்ளது.

சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம்.  சேலம் மாம்பழம் என்றலே  நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு சுவையானது. இது மட்டுமின்றி, சேலம்,  ஜவுளி தொழில், வெள்ளிக்கொலுசு தயாரிப்பு போன்றவற்றிலும் புகழ்பெற்றது. இவை மட்டுமின்றி,  ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியிலும் அகில இந்திய அளவில் சேலம்  முக்கியப் பங்கு வகிக்கிறது. தாய்லாந்துக்கு அடுத்தப்படி, சேலம்  ஜவ்வரி சந்தையே மிகப்பெரிய வணிக சந்தையாக திகழ்கிறது.

தமிழகத்தில் சுமார் 21 மாவட்டங்களில் ஜவ்வரிசி தயாரிப்பு தேவையான மரவள்ளிக் கிழங்கு செடிகள் பயிரிடப்பட்டு வரும் நிலையில், சேலத்தை சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மரவள்ளிகக் கிழங்கு பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 85,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் ஹெக்டேர் ஒன்றுக்கு 27.92 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து இந்தியா உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்தியாவில் மிக அதிகபட்ச அளவான ஹெக்டேர் ஒன்றுக்கு 38 மெட்ரிக் டன் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.  இதில் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் முன்னணியில் உள்ளன.

இந்த மாவட்டங்களில் விளையும் மரவள்ளிக் கிழங்குகள் மூலம் ஆண்டுக்கு 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி 20 லட்சம் மூட்டைகளும், ஸ்டார்ச் மாவு 7 லட்சம் மூட்டைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சேலத்தில் இருக்கும் சாகோ ஆலைகள் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கி ஜவ்வரிசியாகவும் ஸ்டார்ச் மாவாகவும் தயாரிக்கிறது.  இவை சேலம் சாகோசெர்வ் நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பல வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது.  இதன் காரணமாக, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருட்களுக்கு  புவிசார் குறியீடு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சாகோசெர்வ் தீவிரம்  காட்டி வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்த நிலையில், கலப்படம் காரணமாக பிரச்சினை எழுந்தது. அதைத்தொடர்ந்து,  கலப்படத்தை தவிர்க்க சாகோசெர்வ் பல்வேறுஅதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணித்து வந்தது.

அதைத்தொடர்ந்து,  தற்போது, சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற சாகோசெர்வ் விண்ணப்பம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கம் (சேகோசர்வ்) தகவலின்படி, கடந்த 2018-19 ஆம் ஆண்டில் சாகோசெர்வ் ரூ.504 கோடி விற்பனை புரிந்தது. வரும் ஆண்டில் அனைத்து தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மொத்த விற்பனை இலக்கு ரூ.1,000 கோடியாகும். 2018-19 இல் அதிகமாக ரூ.2.98 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2019-20) சேகோசர்வ் அரசு நிர்ணயித்த விற்பனை ரூ.453 கோடியாகும். ஆனால் கடந்த நான்கு மாதங்களில் ரூ.345 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக,  5 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தற்போது, சேலம் ஜவ்வரிசி கலப்படம் இல்லாமல் தரமான ஜவ்வரிசியை தயாரித்து வழங்கி வருகிறது. இதையடுத்து,  புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து உள்ளது.