சென்னை: தமிநாட்டில் கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியவர்களில்,  இதுவரை 62.64 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசிகூட எடுத்துக்கொள்ளவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாரந்தோறும் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையும்  600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பெரியபாளையத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 2ந்தேதி  மாலை வரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 50 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 908 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அதேபோன்று, 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களில் 26 லட்சத்து 26 ஆயிரத்து 311 பேர் முதல் தவணை தடுப்பூசி (78.41 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி கோவாக்சின் என்பதால் 28 நாட்கள் கழித்து 2வது தவணை தடுப்பூசி போடவேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் 2வது தவணை தடுப்பூசி செலுத்த பள்ளிகளிலேயே முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 4.77 சதவீதம் சிறுவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 9 கோடியே 54 லட்சத்து 74 ஆயிரத்து 779 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சதவீதம் அடிப்படையில் பார்க்கும் போது 90.42 சதவீதம். 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 68.97 சதவீதமாக இருக்கிறது.

தமிழகத்தில் 62 லட்சத்து 64 ஆயிரத்து 828 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 96 லட்சத்து 22 ஆயிரத்து 615 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டு வருவதால் தடுப்பூசி என்பது மிகவும் அவசியமானதாக உணரப்படுகிறது.

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனையில் வாங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் தேக்க நிலையில் இருப்பது உண்மை. அதனால் தான் தமிழகத்தில், சி.எஸ்.ஆர் நிதி மூலம் முதல்வர் இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிவகை செய்தார். அதற்கு பிறகும் கூட தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேக்க நிலையில் இருக்கிறது. ஆனாலும் அந்த தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டதாக என்பதை ஐ.சி.எம்.ஆர் இன்னும் முடிவு செய்ய வில்லை.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.கோவிந்தராசன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குனர் ஜவஹர்லால்,பெரியபாளையம் அரசு மருத்துவர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.