டெல்லி: தமிழகத்தில் தேர்வான ராஜ்யசபா முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 6 எம்.பி.கள் மற்றும் நாடுமுழுவதும் தேர்வு செய்யப்பட்ட பல எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மேலவையில் உறுதிமொழி ஏற்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ராஜ்யசபாவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றனர்.  அதன்படி,  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்.பி.கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாநிலங்களவை உறுப்பினராக திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ப.சிதம்பரத்தை தொடர்ந்து மாநிலங்களவையில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களான சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் உறுதிமொழி ஏற்றனர்.

ராஜ்யசபாவின் தலைவராக இருந்த தனது கடைசி அமர்வுக்கு தலைமை வகித்த ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு   பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய வெங்கையா நாயுடு, எம்.பி.க்கள் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில், 57 சதவீத சபை அமர்வுகள் பகுதி அல்லது முழுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இனிமேல், கடந்த காலத்தைவிட,  “வித்தியாசமாகவும் சிறப்பாகவும்” இருக்குமாறு எம்.பி.க்களை வலியுறுத்தினார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் இதுவே கடைசி கூட்டத்தொடர் என்றும், இதனை மறக்கமுடியாத கூட்டமாக மாற்ற எம்.பி.க்கள் தங்களது சிறந்த செயல்திறனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவராக நாயுடுவின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 10 அன்று முடிவடைகிறது. “கடந்த 13 அமர்வுகளில், திட்டமிடப்பட்ட 248 முழு அமர்வுகளில் 141 அமர்வுகள், மொத்த அமர்வுகளில் 57 சதவிகிதம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சீர்குலைந்தன என சுட்டிக்காட்டினார்.