பெங்களூரு

டைபெற உள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டி இடும் 581 பேர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

வரும் 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்த தேர்தல் களத்தில் 2,613 பேர் போட்டியிட்டுள்ளனர்.  இந்த வேட்பாளர்களில் 29 பேர் மட்டும் வேட்பு மனுக்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதையொட்டி 2,586 வேட்பாளர்கள் மீது இருக்கும் குற்றவியல் வழக்குகள் பற்றி டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்) ஆய்வு செய்து, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி, கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 2,613 பேரில் 581 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 2,560 பேரில், 391 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருந்தது. தற்போது 22 சதவீதம் வேட்பாளர்கள் மீதும், கடந்த 2018-ம் ஆண்டு 15 சதவீத வேட்பாளர்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் 404 வேட்பாளர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில் 122 பேர் மீதும், பாஜகவின் 224 வேட்பாளர்களில் 96 பேர் மீதும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 208 வேட்பாளர்களில் 70 பேர் மீதும், ஆம்ஆத்மியின் 208 வேட்பாளர்களில் 48 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. தவிர காங்கிரசில் 69 பேர் மீதும், பாஜகவில் 66 பேர் மீதும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் 52 பேர் மீதும் தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மேலும் மொத்த வேட்பாளர்களில் ஒரு வேட்பாளர் மீது மட்டும் கற்பழிப்பு வழக்கு உள்ளது. தவிர 49 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்ட வழக்குகளும், 8 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும், 35 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.