பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியின் பல்வேறு இடங்களில் ரூ. 7.67 கோடி மதிப்பில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் 21 மழைநீர் சேகரிக்கும் பூங்காக்கள் வட சென்னை பகுதியில் அமையவுள்ளது. தண்டையார்பேட்டையில் அமையவுள்ள ஒரு மழை நீர் சேகரிக்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ. 8.5 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பூங்காக்கள் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் இங்கு அமைக்கப்பட்டு வரும் நிலத்தடி சேமிப்பு கிணற்றில் வந்து விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உபரியாக வரும் தண்ணீர் இங்கிருந்து மழைநீர் வடிகால் வழியாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் மூலம் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இதில் 42 பூங்காக்கள் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.