சென்னை:

டப்பாண்டில் பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள் ஒதுங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக தொழில்நுட்பக் கல்வி  இயக்கத்தில் இன்று தொடங்கியது.  தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உண்டான கலந்தாய்வு தொடங்கப் பட்டது.  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  பரத் என்ற மாணவன் 194 கட் ஆஃப் மார்க் பெற்று முதலிடம் பெற்று இருப்பதாகவும், 141 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.இ படிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், நடப்பாண்டில், விளையாட்டு வீரர்களுக்கு 500 பி.இ இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை இல்லாததால் 15 பொறியியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையே வேண்டாம் என்று கூறிவிட்டன. ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரியை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது என்றும்,  பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.15,000 வரை கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், நாளை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.