சென்னை:  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கோவிலில் திருட்டு போன நடராஜர் சிலை பிரான்சில் இருப்பதை சிலை தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக கோவில்களில் திருடுபோன ஏராளமான சிலைகள் சிலை தடுப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பகுதியில் உள்ள கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் உள்ள 15-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நடராஜர் உலோக சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு  திருட்டு போய் விட்டது. இந்த சிலை  தொடர்பாக கோவில்பட்டி போலீசார் அப்போதே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த நடராஜர் சிலை,  தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஏலக்கடையில்  இருப்பதும், அந்த கடை, அந்த சிலையை ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது தரிய வந்தது. இதைக்கண்ட தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பிரான்ஸ் நாட்டு இந்திய தூதரகம் வாயிலாக மேற்படி சிலையை ஏலம் விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். . அந்த சிலையை மீட்டு, தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.