சென்னை: சென்னை தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சியி தொடர்பான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை தீவுதிடலில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலா பொருட்களை நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், இந்த ஆண்டு கோலாகலமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனப்டி,  47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சி தீவுத்திடலில்  நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ‘பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  எங்களது நிறுவனம் சார்பில் நாடு முழுவதும்  தொழில் வர்த்தகப் பொருட்காட்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் முறையாக டெண்டர் எடுத்து நடத்தி வருகிறோம். இதற்காக எங்களது நிறுவனம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

சென்னை தீவுத்திடலில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பலமுறை சுற்றுலாத்துறை சார்பில் பொருட்காட்சியை நடத்தியுள்ளோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் 2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த அக்டோபர் 31-ந் தேதி வெளியிடப்பட்டது.  இந்த டெண்டரில் எங்களது நிறுவனம் சார்பில் உரிய முன்கேட்புத்தொகை செலுத்தி பங்கேற்றோம். ஆனால், கடந்த நவம்பர் 30-ந் தேதி டெண்டர் திறக்கப்பட்டபோது எங்களது நிறுவனம் உள்பட 5 டெண்டர் விண்ணப்பங்கள் அதில் இருந்தன. ஆனால் மறுநாள் டிசம்பர் 1-ந் தேதியன்று நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறைகளில் எங்களது பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் டெண்டரை இறுதி செய்துள்ளனர். எங்களது நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான டெண்டர் படிவம் மட்டும் திறக்கப்பட்ட நிலையில், டெண்டருக்கான தொகையை நிர்ணயம் செய்யும் நிதி தொடர்பான டெண்டர் படிவம் கடைசிவரை திறக்கப்படவில்லை.  இதன்மூலம் அதிகாரிகள் டெண்டர் நிபந்தனைகளை மீறி தங்களது விருப்பம்போல இந்த டெண்டரை வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. இது சட்டவிரோதமானது. எனவே இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். எங்களது டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து, வருகிற 19-ந் தேதி வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.