சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே கடந்த 18ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கு காரணமாக 3 தொகுதிகள் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சூலூர் தொகுதி எம்எல்ஏ மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியான தொகுதிகள் 4 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், வழக்குகள் அனைதும் பைசல் செய்யப்பட்டதை அடுத்து, தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து,  அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி இடைத்தேர்தல்,  7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு  நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா, சூலூர் தொகுதியில் வெ. விஜயராகவன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.  நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்குமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.