சென்னை

மிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, நடிகர்கள் சிலர், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர், அவர்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். அவர் விதிமீறி வாக்களித்தி ருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றவர், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாதபோது ஒரு வாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது. வெற்றி, தோல்வி குறித்து முடிவுகள் வெளியாகும்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என்றார்.

இதன் காரணமாக அவரது வாக்கு எண்ணிக்கையின்போது சேர்க்கப்படுவது உறுதியாகி உள்ளது.

மேலும்,  சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர்,  வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் நீக்கப்பட்டது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால், அது தொடர்பாக  அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றவர், மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை அனுப்பப்படும்.

‘தேர்தல் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.15 லட்சமாக உயர்தப்பட்டு இருப்பதாகவும்,   அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மே 23-ம் தேதி வரை தலா ஒரு பறக்கும் படை செயல்படும் என்றும் கூறினார்.