சென்னை:

திமுக முன்னாள்  தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதிக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு துரை அழகிரிக்கு எதிராக தொடரப்பட்ட கிராணைட் குவாரி முறைகேடு வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கிழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த அரசு குவாரிகளில் அரசு நிர்ணயித்ததை விட அதிக அளவில் கிரானைட் கற்கள் எடுத்து விற்பனை  செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தில் மேலூர், கீழவளவு, கீழையூர் பகுதிகளில் உள்ள தனியார் கிரானைட் குவாரிகளில்,அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

அதில், மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதால் அரசுக்கு ரூ.257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், துரை தயாநிதிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.