கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இணையத்தளம் மற்றும் தலைவர்களின் சமூக வலைதள முகவரிகள் ஹேக் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஹாசன் மற்றும் பெங்களூரில் நடத்திய சோதனையில் வெட் ஃபேப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றவாளிகளை கர்நாடக போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், பாஜக-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்த வராஹே அனலிட்டிக்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஷஷாங்க் பரத்வாஜ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளங்களை ஹேக் செய்த சிலர் காங்கிரஸ் கட்சி பெயரில் போலி இணையத்தளம் ஒன்றை துவக்கினர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதில் பதிவிட்ட விஷமிகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமான கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதில் சித்தராமையா பெயரில் போலி கடிதங்களையும் பதிவிட்டிருந்தனர். இதனை மறுத்த சித்தராமையா தவறான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் பாஜக-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்த வராஹே அனலிட்டிக்ஸ் என்ற நிறுவனம் மூலம் காங்கிரஸ் கட்சியின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.