டில்லி

குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் டில்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய டில்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய அரசு அந்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் கடந்த மே மாதம் சு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. டில்லி அரசின் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம் ஆளுநருக்கே இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவகாரம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது.   நாடாளுமன்றத்தில் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வரும் வகையில் டில்லி நிர்வாக திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

கடந்த 1 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையிலும்,  7-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டில்லி நிர்வாக திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் மசோதா சட்டமாக அமலாகியுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இனி டில்லியில் பணிபுரியும் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம் ஆளுநரிடம் சென்றுள்ளது.