டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில்  (2019 முதல் 2021 வரை) தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம், இவர்களில் அதிகம் பேர்,  தினக்கூலிகள், சுயதொழில் செய்வோர் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பூபேந்தர் யாதவ்  தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்பவர்கள், 43,420 சம்பளதாரர்கள் மற்றும் 43,385 வேலையில்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்  எழுப்பிய கேள்விக்கு,  பதில் கூறிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறிய பதிலில், ‘2019ம் ஆண்டில் மட்டும் 32,563 கூலி தொழிலாளிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2020ம் ஆண்டில் 37,666 தினக்கூலிகளும், 2021ம் ஆண்டில் 42,004 தினக்கூலி தொழிலாளர்களும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் மொத்தம் 4.56 லட்சம் பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதில் 1.12 லட்சம் தினக்கூலிகள், 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்வோர், 43,420 சம்பளம் பெறும் ஊழியர்கள், 43,385 வேலையில்லா நபர்கள், 35,950 மாணவர்கள், 31,839 விவசாய கூலிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

மேலும் 2020-21 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகக் கொடுமையாக இருந்தது. இதனால் அந்தக் காலகட்டத்தில் தினக்கூலிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே வெளியேறிக் கொண்டிருந்தனர்.

2020 மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டது. பொது போக்குவரத்து முடங்கியதால் தங்கள் பகுதிகளை அடைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கி.மீ தூரத்துக்கு நடந்தோ, தனியார் வாகனங்களிலோ செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கிட்டத்தட்ட 8,700 பேர் (பெரும்பாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) ரயில் தண்டவாளங்களில் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.