நாக்பூரில் இருந்து மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்திற்கு (JNPT) ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 90 ரயில்வே கண்டெயினர்கள் மாயமானது.

20 அடி நீளமுள்ள மொத்தம் 90 கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தது.

பிப்ரவரி 1 அன்று PJT1040201 என்ற எண் கொண்ட ரயில் மூலம் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் (ICD) இருந்து புறப்பட்ட ரயில், நான்கு அல்லது ஐந்து நாட்களில் JNPT-யை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த கண்டெய்னர்கள் வந்து சேரவில்லை.

இந்த ரயில் கடைசியாக நாசிக் மற்றும் கல்யாண் இடையே கசரா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தை கடந்ததாகக் கூறப்படுகிறது.

கண்டெய்னர் மற்றும் சரக்கு போக்குவரத்து ரயில் பெட்டிகளின் இயக்கத்தை நேரடியாக கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்க தகவல் அமைப்பில் (FOIS) இருந்து இந்த சரக்கு ரயில் காணாமல் போனது குறித்து அதிகாரிகள் எந்த துப்பும் கிடைக்காமல் கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்த கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) -ன் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், “சிஸ்டத்தில் ரயிலின் இருப்பிடம் தெரியாததால் சில பிழைகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, ரயிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே CONCOR மற்றும் ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் கண்டெய்னர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ரயில் காணாமல் போனதன் காரணமாக இப்பகுதியின் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் அதேவேளையில் இது இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இருப்பினும், கான்கோர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் இருந்து காணாமல் போன ரயிலைக் கண்டுபிடிக்க கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடி வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.