டெல்லி: அமெரிக்க நிறுவமான ஹிண்டர்பெர்க் அறிக்கையை தொடர்ந்து, உலக பணக்கார்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலீட்டாளர்களுக்கு ரூ.53,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு,   முதல் வாரத்தில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ரூ.20,000 கோடி மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்பி அளிக்கப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது. அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதானி சொத்துமதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 வீழ்ச்சி அடைந்தது. அதானி குழும பங்கு விலைகள் இன்றும் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஜனவரி 24-ம் தேதி ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடிக்கு கீழ் சென்றுவிட்டது.

இதனிடையே, அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.