சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை (10ந்தேதி)  தமிழகம் முழுவதும் 31வது  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  ஒரு லட்சம் இடங்களில்  நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர்  தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக நாட்டு மக்களை துன்புறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். தொற்று பரவலை தடக்க கடந்த  2021ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும்  ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிறு) நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  சென்னையில் 50ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.

தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.