சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை  வீட்டில் இன்று  சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது மத்திய நிதிஅமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல குற்றசாட்டுகள் உள்ளன. அதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென, சீன நாட்டை சேர்ந்த 263 பேருக்கு, சட்ட விரோதமாக  விசா பெற்று கொடுக்க  லஞ்சமாக் ரூ.50 லட்சம்  பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ, அமலாக்கத்துறையினல், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்பான இடங்களில் திடீர் ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டின்போது, அந்த சமயம் கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்தின்  இருந்ததால்  அவர் வீட்டில் உள்ள பல்வேறு அறைகள், பீரோ உள்ளிட்ட பல இடத்தில் சோதனை நடத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  இன்று மீண்டும் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த வழக்கு சம்பந்தமாக  சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அதுபோல, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐயும் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.