சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், 2,762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா  தொற்றின் 2வது அலை தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  நேற்று  ஒரேநாளில் தமிழகத்தில் 31 ஆயிரத்து79 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 775 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. தற்போதைய நிலையில், தமிழகத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் சென்னையில் நேற்று புதியதாக  2,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை பாதிப்புக்கு உள்ளானோர் மொத்த எண்ணிக்கை  4,96,706 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும்  107 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,831 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  4,48,377 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு, குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 41,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.