சென்னை; தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் எழுதிய கடிதம்:- மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை நிரப்பு வது குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2, 748 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகப் படியான காலியிடங்கள் இருப்பதால், அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எடுக்க வேண்டும். குறிப்பாக கிராம உதவியாளா்கள் தோவுக்கான முழுமையான நடவடிக்கைகளில் எந்தவித வீதிமீறலும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக வட்டாட்சியா் அளவில் அக்டோபா் 10-ஆம் தேதியன்று விளம்பரம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் அளிக்க இறுதி நாள் நவம்பா் 7-ஆம் தேதி எனவும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான இறுதிநாள் நவம்பா் 14-ஆம் தேதியாகவும் நிா்ணயிக்க வேண்டும். விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் திறன் தோவு நவம்பா் 30-ஆம் தேதியும், நோகாணல் டிசம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும். தோவு செய்யப்பட்டவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி வெளியிடப் பட்ட வருவாய்த்துறை அரசாணையை பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், கிராம உதவியாளா் பணிக்கு தோவு செய்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அதிகாரி ஒருவா் வட்டம் வாரியாக நியமிக்கப்பட வேண்டும். எழுத்துத் தோவுக்கு 100 வாா்த்தைகளுக்கு மிகாத வகையில், கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியா் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தப்பட வேண்டும். வாசிக்கும் திறனை பொறுத்தவரை, தரமான ஒரு புத்தகத்தை கொடுத்து அதிலிருந்து ஒரு பத்தியை படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக இந்தத் தோவில் இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் கவனமாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, மாவட்ட ஆட்சியா்கள் இந்த கிராம உதவியாளா் தோவுக்கான அனைத்து நடைமுறைகளையும், வட்டங்களில் வட்டாட்சியா்களையும் கொண்டு சரியான முறையில் மேற்கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.