பெங்களூரு: பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், 25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிவில்  நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளியான நாராயணசாமி- – வெங்கடரத்னம்மா தம்பதியின் மகள் காயத்ரி, 25. ஏழ்மையான தலித் குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரி, அரசு துவக்கப் பள்ளி, பங்கார்பேட்டை மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளி, கோலார் அரசு மகளிர் கல்லுாரியில் பட்டப் படிப்பு  முடித்துவிட்டு, தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்தார்.

படிக்கும்போதே, அந்த பகுதியான பங்கார்பேட்டையில் மூத்த வக்கீலான  சிவராம் சுப்ரமணியத்திடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்றி வந்தார். அப்போது,  சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வு விளம்பரம் வெளியான நிலையில், அதற்கு  ஆன்லைனில் விண்ணப்பித்து எழுதினார்.  இந்த தேர்வு முடிவுகள் தற்போது வௌியாகி உள்ளது. இதில் காயத்திரி தேர்ச்சி பெற்றுள்ளார்.  இதனால், அவர் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இதன் மூலம் இளம் வயதில் சிவில் நீதிபதி ஆகும் முதல் இளம்பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த பங்கார்பேட்டை, தங்கவயல், கோலார் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீதிபதியாக தேர்வானது குறித்து கருத்து தெரிவித்தள்ள காயத்ரி,  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். எனது தந்தை கூலி வேலை செய்து, என்னை படிக்க வைத்தார். அவர் பட்ட கஷ்டமே எனக்கு பெரிய பாடம். எனது பெற்றோரை நிம்மதியாக வைத்துக் கொள்வதே, நான் அவர்களுக்கு செலுத்தும் கைமாறாகும். அநீதியை எதிர்த்து நியாயம் கிடைக்க செய்வேன் என தெரிவித்துள்ளார்.