2023 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது இதற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 31 ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கும் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்றத்துக்கும் இடையே இருந்த மதில்சுவர் அகற்றப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய ஐ.டி. கார்டுகள் வழங்கும் பணி மற்றும் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து ஜனாதிபதியின் பாராளுமன்ற கூட்டுக் கூட்ட உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகிய நிகழ்வுகள் புதிய பாராளுமன்றத்தில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து பிப்ரவரி 13 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டதிற்கு பிப். 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 13ல் மீண்டும் துவங்கும் கூட்டம் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என்றும் பயன்பாடுகளுக்குப் பிறகு புதிய பாராளுமன்றத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை அப்போது மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடாளுமன்றச் செயலரிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.