இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் துவங்கிய இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பயிற்சிக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டு அதிகரித்தது.

இதனை அடுத்து, தலைவர் பதிவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்-கை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை கைவிடும் படி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் பாஜக-வைச் சேர்ந்தவருமான பபிதா போகத் போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேவேளையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா-வும் போராட்டத்தைக் கைவிட்டு வீரர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தையில் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

இரவு 2 மணி வரை சுமார் நான்கு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்த நிலையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பயிற்சிக்கு வரும் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களின் மகள்கள் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் நிலையில் சம்மேளன தலைவரின் பதவி நீக்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்வதை அடுத்து இன்று பிற்பகல் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு எதிராக மல்யுத்தத்தில் இறங்கிய வீரர்கள்… பாலியல் வன்கொடுமை காரணமாக ஜந்தர் மந்தரில் போராட்டம்…