ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண புவனேஷ்வர் சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விசாரித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் ஹாக்கி போட்டிகளைக் காண தன்னை அழைத்ததற்கும் ஒடிஷாவில் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தான் அறிந்துகொள்ள உதவியதற்கும் நவீன் பட்நாயக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அப்போது பேசிய நவீன் பட்நாயக் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து விசாரித்ததாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாநில அரசு செயல்திட்டங்கள் குறித்து அம்மாநில அதிகாரிகள் விளக்கினர்.

அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஹாக்கி போட்டியையும் பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் அதன் உள்கட்டமைப்பு விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்தப் பயணத்தில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அதிகாரிகள் சிலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்.