சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுபோல, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

வரும் 12ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வணிக நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு,  போனஸ் அறிவித்து உள்ளது.

அதன்படி, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள  அறிவிப்பில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.”

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.”

“இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.