சென்னை:  ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள  நிர்வாகி ஹரிஷ் என்பவர் தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை  அமைந்தகரையில் உள்ளது.  ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்து, சுமார் 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்களிடம் வசூலித்த டெபாசிட் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால், இந்த விவகாரம் பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5நிறுவனங்கள் மீதும்  வழக்குப்பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

கடந்த 2022ம்   மே மாதம் 24 ஆம் தேதி ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில்  நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களும், 70-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இநத நிலையில், தற்போது நிதி நிறுவனத்தை சேர்ந்த ஹரிஷ், மாலதி ஆகிய  2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ் பாஜகவில் உறுப்பினராக இருப்பத குறிப்பிடத்தக்கது.

அதிக வட்டி என விளம்பரம் செய்த, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!