சென்னை: தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று சட்டப்பேரவையில் அதிமுக அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கை கண்டித்து,   தனது ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அவ்வப்போது தனது மன வருத்ததை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு ஆறுதல் தேடி வருகிறார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த வந்த பூங்குன்றன். ஜெ.மறைவுக்கு பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள முட்டல், மோதல்கள், வழக்குகள் குறித்து அவ்வப்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றும்படி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் அதிமுகவின் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். அதில்,  ‘’ஒரு மனிதனுடைய வலியை அடுத்தவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த வலி தனக்கு வரும் போதுதான் தடுமாறுகிறார்கள்.

தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனநிலையே இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

ஒருவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் ஏன் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே விமர்சனங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒருவரை விமர்சிக்கின்ற போது அதில் உண்மை இல்லை என்றால் நீங்களும் ஒரு நாள் விமர்சிக்கப்படுவீர்கள் என்பதே காலம் நமக்கு உணர்த்தும் பாடம்.

அடுத்தவர் மனதை புண்படுத்த நீங்கள் தயாரானீர்கள் என்றால் உங்கள் மனதை புண்படுத்துவதற்கு காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்தவர்களை குறை சொல்லி வாழப் பழகாதீர்கள். உங்கள் குறைகளை திருத்திக் கொண்டு வாழப் பழகுங்கள்’’

இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.

பூங்குன்றனின் பதிவு அதிமுகவினரிடைய விவாதப்பொருளாக மாறி உள்ளது.