டெல்லி: நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், இனிமேல் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 688 சுங்கச் சாவடிகள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 இடங்களில் சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 6,606 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில்  அருகருகே பல சுங்கச்சாவடிகளும் உள்ளன. குறிப்பாக, மாதவரம் முதல் தாம்பரம் வரையிலான சுமார் 40 கி.மீ. தூரத்திற்குள்ளே இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுபோன்ற சுங்கக்சாவடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்களை எழுந்துள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நிதின்கட்கரி,   60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 60 கி.மீ. தொலைவுக்கும் குறைவாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் சூரப்பட்டு- வானகரம் இடையிலான 19.5 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச் சாவடிகள், ஆத்தூர் – விக்கிரவாண்டி இடையிலான 43 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள், விக்கிரவாண்டி – செங்குறிச்சி இடையிலான 26 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள் செங்குறிச்சி – திருமந்துரை இடையிலான 52.5 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிகள், சமயபுரம் – பூதக்குடி இடையிலான 43.4 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச் சாவடிகள், பள்ளிகொண்டா – வாணியம்பாடி இடையிலான 50கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிக்குள் என மொத்தம் 6 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்குறித்து அன்மையில் அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சென்னை புறநகரில் வானகரம் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.