திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களோடு வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை ஆணையர் உமா மேற்பார்வையில், உதவி ஆணையாளர் ரமேஷ் கிருஷ்ணன், வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் காவல் படையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வாங்கி சரிபார்த்தனர். அப்போது சிறுபூலுவம் பட்டி அத்திக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்காள தேசத்தினர் தங்கி வேலை பார்ப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு பணியாற்றி வந்த வங்காள தேசத்தை சேர்ந்த அலாம்கிர், சுமன், மஞ்சுருல் ஹக், அப்துல் கலாம், கோகான், டோலான் ஹூசைன், ஜோஜிப்மியா, முக்தர் மியா, ஆஷிக், லல்மியா, கபீர் ஹூசைன், நூருல்,‌ ஷமின், ஹபிபர், குகான், ரபிக்யுசிலிலேம், ஜகான்கிர்லம், பிஜாஸ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 19 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது அவை போலியானது என்பது தெரிய வந்தது. இந்த ஆதார் அட்டைகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அச்சடித்து உள்ளனர். ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 1500 வரை கொடுத்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, திருப்பூர் 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தப்பட்டனர். பின் நீதிமன்ற உத்தரவுப்படி, 19 போரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.